திருவள்ளூர்
மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி சாவு
|கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா (வயது 24). நேற்று முன்தினம் இரவு மாதர்பாக்கத்தில் இருந்து ஈகுவார்பாளையம் நோக்கி கிருஷ்ணா மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். அவருடன் மோட்டார் சைக்கிளில் நண்பர்களான சிறுபுழல்பேட்டையை சேர்ந்த கார்த்திக் (18), பொன்னேரி அடுத்த வேம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான நரேஷ் (20) ஆகியோர் அமர்ந்து வந்தனர்.
ஈகுவார்பாளையம் அரசு பள்ளி அருகே சாலை திருப்பத்தில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த கல்லில் மோட்டார் சைக்கிள் மோதி கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே கட்டிட தொழிலாளி நரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மற்ற இருவரும் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.