திருவள்ளூர்
நசரத்பேட்டை அருகே லாரியில் இருந்து இறக்கும்போது கண்ணாடிகள் சரிந்து தொழிலாளி பலி
|நசரத்பேட்டை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் லாரியில் இருந்து கண்ணாடி லோடுகளை இறக்கும் போது கண்ணாடிகள் சரிந்து விழுந்து தொழிலாளி பலியானார்.
கண்ணாடிகள் விழுந்தது
நசரத்பேட்டை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கண்ணாடி கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று பாண்டிச்சேரியில் இருந்து கண்ணாடிகள் லாரியில் எடுத்து வரப்பட்டது. லாரியிலிருந்து கம்பெனிக்குள் கண்ணாடிகளை இறக்கி வைக்கும் பணியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த அம்ரீஷ் குமார் (வயது 27), என்பவர் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணாடிகள் திடீரென மளமளவென சரிந்து அம்ரீஷ் குமார் மீது விழுந்தது. இதில் அவரது கழுத்தில் கண்ணாடி குத்தி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
தொழிலாளி பலி
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அம்ரீஷ் குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்து போன அம்ரீஷ் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போதிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் கூடுதல் ஊழியர்கள் இல்லாமல் கண்ணாடியை இறக்கியதே விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் அந்த கம்பெனியை சேர்ந்த சிலரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.