திருவள்ளூர்
ஆர்.கே.பேட்டை அருகே மின்னல் தாக்கி தொழிலாளி சாவு
|ஆர்.கே.பேட்டை அருகே மின்னல் தாக்கி கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை அருகே விளக்கணாம்பூடி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜீவராஜ் (வயது 53). கூலித்தொழிலாளி. இவருக்கு குமாரி (48) என்ற மனைவியும், சுரேஷ்குமார், விஜயகுமார் என்ற 2 மகன்களும், சவுந்தர்யா, ரோஜா என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்களில் சவுந்தர்யா, ரோஜா ஆகியோருக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலை ஆர்.கே.பேட்டை பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அப்போது ஜீவராஜ் தனது நண்பர் பெருமாள் என்பவருடன் அந்த கிராமத்தில் இருக்கும் ஏரிக்கரை அருகே உள்ள பெருமாளின் நிலத்தை பார்ப்பதற்காக வயலில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று பலத்த மழை பெய்யவே ஆளுக்கு ஒரு பக்கமாக மழையில் இருந்து ஒதுங்க ஓடினார்கள். இதில் ஜீவராஜ் வயல்வெளியில் இருந்த தென்னை மரத்தின் கீழ் ஒதுங்கினார். அப்போது ஜீவராஜ் மின்னல் தாக்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆர்.கே. பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.