சேலம்
கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி வெட்டிக்கொலை
|ஏற்காட்டில் கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளியை வெட்டிக்கொன்ற தந்தை, மகனை போலீசார் கைது ெசய்தனர்.
ஏற்காடு:-
ஏற்காட்டில் கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளியை வெட்டிக்கொன்ற தந்தை, மகனை போலீசார் கைது ெசய்தனர்.
கூலித்தொழிலாளி
சேலம் மாவட்டம் ஏற்காடு மாரமங்கலம் கும்மிப்பாடி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). விவசாய கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மனைவி புஷ்பா. இந்த நிலையில் சிவக்குமாருக்கும், புஷ்பாவுக்கும் வேலைக்கு சென்ற இடத்தில் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கு இடையே கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இதை அறிந்த மாணிக்கம், தனது மனைவியையும், சிவக்குமாரையும் கண்டித்துள்ளார். மேலும் சிவக்குமாரிடம் தனது மனைவி புஷ்பாவுடன் உள்ள தொடர்பை முறித்துக்கொள்ளுமாறு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். ஆனால் அதனை அவர்கள் கேட்காமல் தொடர்ந்து சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.
வெட்டிக்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவக்குமாரிடம், மாணிக்கம் மற்றும் அவரது மகன் தங்கராஜ் ஆகியோர் கள்ளக்காதலை கைவிடுமாறு கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த 2 பேரும் கொடுவாளால் சிவக்குமாரை வெட்டியதுடன், இரும்பு கம்பியால் தாக்கி உள்ளனர். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதைப்பார்த்ததும் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
மேலும் படுகாயம் அடைந்த சிவக்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஏற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி ைவத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
கைது
இது குறித்து ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாக இருந்த மாணிக்கம், அவரது மகன் தங்கராஜ் ஆகியோரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.