கன்னியாகுமரி
தொழிலாளி மின்சாரம் தாக்கி சாவு
|ஆரல்வாய்மொழியில் அறுந்து கிடந்த மின் வயரை சரி செய்த போது மின்சாரம் தாக்கி செங்கல்சூளை தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
நாகர்கோவில்,
ஆரல்வாய்மொழியில் அறுந்து கிடந்த மின் வயரை சரி செய்த போது மின்சாரம் தாக்கி செங்கல்சூளை தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
செங்கல்சூளை தொழிலாளி
ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியில் இசக்கியப்பன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. இங்கு மேற்கு வங்காளம் மூசாரபாத் மாவட்டத்தை சேர்ந்த சஞ்சய் ஹஸ்ரா (வயது 43), அவருடைய மனைவி மற்றும் மகன் கடந்த 2 ஆண்டுகளாக வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று செங்கல்சூளையில் சஞ்சய் ஹஸ்ரா வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது காற்றின் வேகம் காரணமாக அங்கிருந்த தென்னை மரத்தில் உள்ள மட்டை மின்வயர் மீது விழுந்தது. இதில் மின்வயர் அறுந்தது.
பரிதாப சாவு
உடனே அறுந்து கிடந்த மின் வயரை சரி செய்ய சஞ்சய் ஹஸ்ரா முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட சஞ்சய் ஹஸ்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சஞ்சய்ஹஸ்ரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.