< Back
மாநில செய்திகள்
குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

தினத்தந்தி
|
26 Dec 2022 12:30 AM IST

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் குளத்தில் மூழ்கி தொழிலாளி பலியானார்.

திண்டுக்கல் மேட்டுப்பட்டி, எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 43). கட்டிட தொழிலாளி. அவருடைய மனைவி ஆரோக்கிய ஜெனிட்டா (30). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று செல்வம், தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் வீட்டின் அருகில் உள்ள தட்டார்பட்டி குளத்துக்கு குளிக்க சென்றார். அங்கு கரையின் ஓரமாக ஜெனிட்டாவும், அவரது குழந்தைகளும் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது செல்வம் மட்டும் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர் குளத்தில் மூழ்கினார். வெகுநேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெனிட்டா, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குளத்தில் மூழ்கிய செல்வத்தை தேடி பார்த்தார். ஆனால் செல்வத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குளத்தில் இறங்கி செல்வத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது குளத்தின் சகதியில் செல்வம் சிக்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை தீயணைப்பு படைவீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், செல்வம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்