கன்னியாகுமரி
குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி
|இரணியல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி
திங்கள்சந்தை,
இரணியல் அருகே உள்ள மேலகுருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் நாராயணன் என்ற தாணிவேல் (வயது49), கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று மாலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால், உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள பாறைகுளம் அருகே தாணிவேல் நடந்து சென்றதை சிலர் கண்டதாக கூறினர். இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. திங்கள்சந்தை தீயணைப்பு நிலைய அதிகாரி பிரதீப்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து குளத்தில் இறங்கி தேடினர்.
நீண்ட நேரம் தேடுதலுக்கு பின்பு தாணிவேல் குளத்தில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். அவர் குளத்தின் கரையோரம் நடந்து சென்றபோது தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த கக்கோட்டுத்தலை கிராம நிர்வாக அலுவலர் ராதா, இரணியல் தனிப்பிரிவு ஏட்டு சுஜின் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பிணத்தை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தாணிவேல் சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.