சென்னை
மழைநீர் கால்வாய் தூர்வாரும்போது சுவர் சரிந்ததில் படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
|மழைநீர் கால்வாய் தூர்வாரும்போது சுவர் சரிந்ததில் படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை எண்ணூர் தாழங்குப்பம் உலக நாதபுரம் 6-வது தெருவில் சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அம்ரேஷ் குமார் (வயது 20), பிரகாஷ்(22) உள்பட 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். தரையில் இருந்து சுமார் 10 அடி வரை பள்ளம் தோண்டி ஏற்கனவே போடப்பட்டிருந்த மழைநீர் கால்வாயை பொக்லைன் மூலம் அகற்றியபோது, எதிர்பாராதவிதமாக பக்கவாட்டில் உள்ள சுமார் 10 அடி உயரம், 20 அடி அகலமுள்ள பழைய மழைநீர் கால்வாய் சுவர் திடீரென பள்ளத்தில் சரிந்து விழுந்தது.
இதில் பிரகாஷ், அம்ரேஷ் குமார் இருவரும் பள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணிநேரம் போராடி இருவரையும் பத்திரமாக மீட்டனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அம்ரேஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். பிரகாஷ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.