< Back
மாநில செய்திகள்
விக்கிரவாண்டி அருகே மின்வேலியில் சிக்கி தொழிலாளி சாவு
விழுப்புரம்
மாநில செய்திகள்

விக்கிரவாண்டி அருகே மின்வேலியில் சிக்கி தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
9 July 2022 10:03 PM IST

விக்கிரவாண்டி அருகே மின்வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார். இதுதொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டார்.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அடுத்த வேம்பி கிராமத்தை சேர்ந்தவர் ராமு(வயது 35). விவசாயி. இவருடைய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மணிலா பயிரை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் பயிரை பாதுகாப்பதற்காக ராமு, மின்வேலி அமைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த தொழிலாளியான ஏழுமலை(50) என்பவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக ராமு நிலத்தின் வழியாக சென்றார். அப்போது ராமு அமைத்திருந்த மின்வேலியை ஏழுமலை மிதித்ததாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட ஏழுமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இது பற்றி தகவல் அறிந்த கஞ்சனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஏழுமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நிலத்தின் உரிமையாளர் ராமுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்