கன்னியாகுமரி
அகஸ்தீஸ்வரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி சாவு நாய் குறுக்கே பாய்ந்ததால் பரிதாபம்
|அகஸ்தீஸ்வரத்தில் சாலையின் குறுக்கே நாய் பாய்ந்ததால் மோட்டார்சைக்கிள் மின்கம்பத்தில் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தென்தாமரைகுளம்,:
அகஸ்தீஸ்வரத்தில் சாலையின் குறுக்கே நாய் பாய்ந்ததால் மோட்டார்சைக்கிள் மின்கம்பத்தில் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
தொழிலாளி
அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள வெள்ளையன் தோப்பை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 46). இவருக்கு பொன்சுதா (42) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அத்துடன் ரியல் எஸ்டேட் புரோக்கராகவும் இருந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை பாஸ்கர் கோழிப்பண்ணை வேலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். அகஸ்தீஸ்வரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் வரும் போது ஒரு நாய் திடீரென குறுக்கே பாய்ந்தது. இதனால் பாஸ்கர் நிலை தடுமாறிய போது, மோட்டார் சைக்கிள் ரோட்டின் ஓரத்தில் நின்ற மின் கம்பத்தில் மோதியது. இதில் பாஸ்கருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு கீழே விழுந்தார்.
பரிதாப சாவு
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பாஸ்கர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பொன்சுதா கொடுத்த புகாரின் பேரில் தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.