சேலம்
மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
|தொளசம்பட்டி அருகே மதுபோதையில் தகராறு ஏற்பட்டது. மகனை தீர்த்துக்கட்ட மோட்டார் சைக்கிளுக்கு மின்சாரம் பாய்ச்சியவர் அதே மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
ஓமலூர்:-
தொளசம்பட்டி அருகே மதுபோதையில் தகராறு ஏற்பட்டது. மகனை தீர்த்துக்கட்ட மோட்டார் சைக்கிளுக்கு மின்சாரம் பாய்ச்சியவர் அதே மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
தொழிலாளி
ஓமலூர் அடுத்த தொளசம்பட்டி மானத்தாள் நாடார் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 58). தொழிலாளி, இவருடைய 2-வது மகன் அழகேசன். இவர்கள் இருவரும் மது குடித்து விட்டு அடிக்கடி தகராறு செய்து கொள்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த ராஜேந்திரனின் தாய் பாவாயி, இவர்கள் வழக்கம் போல் சண்டை போட்டு கொள்வார்கள். பின்னர் சமாதானம் ஆகி விடுவார்கள் என நினைத்து தூங்க சென்றார்.
மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது வீட்டு வாசலில் ராஜேந்திரன் பிணமாக கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், மகனின் உடலை பார்த்து கதறி அழுதார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அப்போது மின்சாரம் தாக்கி ராஜேந்திரன் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
மகனை தீர்த்துக்கட்ட சதி
தகவல் அறிந்த தொளசம்பட்டி போலீசார் விரைந்து வந்தனர். ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தந்தைக்கும், மகனுக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அழகேசன் அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. அப்படி இருந்தும் ஆத்திரம் தீராத ராஜேந்திரன், அழகேசன் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிளுக்கு, அங்குள்ள சுவிட்ச் பெட்டியில் இருந்து மின்சாரத்தை பாய்ச்சி உள்ளார். அந்த மின்சாாரம் எதிர்பாராதவிதமாக ராஜேந்திரன் மீது பாய்ந்து அவர் உயிரிழந்து இருந்தது தெரிய வந்தது. மகனை தீர்த்துக்கட்ட செய்த சதியில் அவரே சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.