சென்னை
தியாகராயநகரில் மண் சரிந்து கட்டிட தொழிலாளி பலி
|தியாகராயநகரில் கட்டிட பணியின் போது மண் சரிந்து விழுந்த விபத்தில் கட்டுமான தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
கட்டிட வேலை
சென்னை தியாகராயநகர் அபிபுல்லாசாலையில் புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடக்கிறது. பாரதி ஹோம் என்ற கட்டுமான நிறுவனம் புதிய கட்டிடத்தை கட்டி வருகிறது. இங்கு தங்கி இருந்து மேற்கு வங்காள மாநிலத்தைச்சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். சரோவர் ஹூசைன் (வயது 20) என்ற தொழிலாளியும், அங்கு தங்கி இருந்து வேலை பார்த்தார்.
கட்டிடம் கட்டும் இடத்தில் 8 அடி ஆழ பள்ளத்தில் மழை தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் மண் சரிந்து விழுந்து விடக்கூடாது என்பதற்காக பள்ளத்தை சுற்றி பலகை பொருத்தும் பணி நடந்தது. இதற்காக பள்ளத்தில் இறங்கி, தொழிலாளி சரோவர் ஹூசைன் வேலை செய்தார்.
மண்சரிந்து பலி
ஆனால் எதிர்பாராத விதமாக மண் சரிந்து விழுந்து விட்டது. இதில் தொழிலாளி சரோவர் ஹூசைன் மாட்டிக் கொண்டார். மயக்கமடைந்து உயிருக்கு போராடிய அவரை 108 ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சரோவர் ஹூசைன் பரிதாபமாக இறந்து போனார். இது தொடர்பாக பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை நடக்கிறது.