காஞ்சிபுரம்
மழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட மழைநீர் கால்வாய்த்தில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
|மாங்காட்டில் மழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வெளியேறுவதற்காக பல்வேறு இடங்களில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மாங்காட்டில் இருந்து மலையம்பாக்கம் செல்லும் சாலை, மாரியம்மன் கோவில் தெருவில் மழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் மழை நீர் தேங்கி இருந்தது.
நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள், அந்த பள்ளத்தில் ஆண் ஒருவர் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த நபரை மீட்டு பார்த்தபோது அவர் இறந்து போனது தெரியவந்தது.
இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்து போனவர் மாங்காடு பாலாண்டேஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்த லட்சுமிபதி (வயது 42) என்பதும், பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. அவருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.
மழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்டு இருந்த சுமார் 3 அடி பள்ளத்தில் தேங்கி இருந்த மழைநீரில் தலை குப்புற விழுந்தவர் எழுந்திருக்க முடியாமல் மூச்சுத்திணறி இறந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மாங்காடு நகராட்சியில் நடைபெறும் மழைநீர் கால்வாய்க்கான பணிகளில் பல்வேறு இடங்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் எதுவும் செய்யாமல் இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லட்சுமிபதி, மழைநீர் கால்வாயில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது குடிபோதையில் விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது தள்ளி விட்டு இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் எப்படி இறந்தார்? என்பது தெரிய வரும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
லட்சுமிபதி உயிரிழந்த சம்பவத்துக்கு பிறகு நகராட்சி அதிகாரிகள் அவசர அவசரமாக மழை நீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளங்களின் ஓரங்களில் கம்புகள் நட்டு தடுப்புகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.