தென்காசி
மோட்டார் சைக்கிள்- டிப்பர் லாரி மோதல்; தொழிலாளி சாவு
|சுரண்டை அருகே மோட்டார் சைக்கிள்- டிப்பர் லாரி மோதியதில் தொழிலாளி இறந்தார்.
சுரண்டை:
கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் வண்ணமுத்து (வயது 33). இவர் கடையநல்லூர் மின்சார வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலாயுதபுரம் பகுதியில் உள்ள காற்றாலைகளில் மின் கணக்கீடு செய்ய தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிள் சுரண்டை அருகே வேலாயுதபுரம் கிராமம் பகுதியில் ஒரு திருப்பத்தில் சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக வண்ணமுத்து ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதில் தூக்கி வீசப்பட்ட வண்ணமுத்து பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாம்பவர்வடகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற டிப்பர் லாரியை தேடி வருகின்றனர்.