திருவள்ளூர்
குடும்ப பிரச்சினை காரணமாக இலங்கை தமிழர் முகாமில் தொழிலாளி தற்கொலை
|குடும்ப பிரச்சினை காரணமாக இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு வசித்து வந்தவர் ஞானசேகரன் (வயது 46). தொழிலாளி. இலங்கையில் உள்ள வவுனியா அடுத்த செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்த இவருக்கு திருமணமாகி பிரிய லதா (35) என்ற மனைவியும், ஆனந்த் (20) என்ற மகனும், யாழினி (18) என்ற மகளும் உள்ளனர்.
நேற்று காலை வீட்டில் தனியே இருந்த ஞானசேகரன், குடும்ப பிரச்சினை காரணமாக மின்விசிறி இணைப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் ஞானசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரம்பாக்கம் அருகே உள்ள நரசிங்கபுரம் கிராமம் கமலா தெருவை சேர்ந்தவர் தணிகாசலம் (75). கூலி தொழிலாளி. இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல அஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றும் இதுநாள் வரையிலும் அவருக்கு வயிற்று வலி குணமாகவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தணிகாசலத்திற்கு தீராது வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த அவர் தன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தான் அறைக்கு சென்று அங்கு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவரது மகன் பாஸ்கரன் மப்பேடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.