கடலூர்
மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை
|குறிஞ்சிப்பாடி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
குறிஞ்சிப்பாடி,
குறிஞ்சிப்பாடி அருகே வெங்கடாம்பேட்டை முதலியார் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சீனுவாசன் (வயது 45). தொழிலாளி. இவருடைய மனைவி சரளா. இவர்களுக்கு ஒரு ஆண், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சீனுவாசனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் தினந்தோறும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் சண்டை போட்டு வந்தார்.
அதேபோல் சம்பவத்தன்று குடித்து விட்டு வந்த சீனுவாசனுக்கும், அவரது மனைவி சரளாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சீனுவாசன் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு மயங்கி விழுந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி அவரது தாய் வனஜா குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.