கன்னியாகுமரி
மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு அழைக்காத விரக்தி- தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
|கருங்கல் அருகே மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அழைக்காத விரக்தியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கருங்கல்:
கருங்கல் அருகே மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அழைக்காத விரக்தியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி
கருங்கல் அருகே உள்ள மிடாலக்காடு புதுக்காடு வெட்டிவிளை பகுதியை சேர்ந்தவர் தம்பிராஜன் (வயது 47), தொழிலாளி. இவருடைய மனைவி ஜெமிலா (38). தம்பிராஜன் தினமும் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபடுவது வழக்கமாம். இவருடைய தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்ததால் கடந்த சில நாட்களாக வீட்டில் உள்ள குடும்பத்தினர் அவரிடம் பேசுவதில்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் தம்பிராஜனின் மகன் பிறந்தநாளை குடும்பத்தினர் சேர்ந்து கொண்டாடியுள்ளனர். ஆனால் இந்த கொண்டாட்டத்துக்கு தம்பிராஜனை அழைக்காமல் அவர்கள் விட்டு விட்டனர். இதனால் தம்பிராஜன் மனம் உடைந்த நிலையில் இருந்தார்.
தற்கொலை
நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கருங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தம்பிராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுெதாடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு அழைக்காத விரக்தியில் தந்தை தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.