திருவண்ணாமலை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
|கீழ்பென்னாத்தூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கீழ்பென்னாத்தூர்
சென்னை வன்னிய தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 66), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பங்கஜவள்ளி (58). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இவர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடி அருகில் உள்ள சிறுகொத்தான் கிராமத்தில் வசிக்கும் விவசாயி சண்முகம் என்பவரது வீட்டிற்கு வாடகைக்கு வந்துள்ளனர்.
வெங்கடேசன் மது அருந்திவிட்டு அடிக்கடி பங்கஜவள்ளியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், சில சமயங்களில் மனநிலை பாதித்தவராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பங்கஜவள்ளி நேற்று கீழ்பென்னாத்தூர் அருகே வளத்தியில் உள்ள மகள் ரம்யா வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அன்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வெங்கடேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை சோமாசிபாடியில் வசித்து வரும் மற்றொரு மகள் ராகவி வெங்கடேசன் வீட்டிற்கு வந்தபோது வெங்கடேசன் தூக்கில் இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.