கன்னியாகுமரி
வழுக்கம்பாறை அருகேதொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
|வழுக்கம்பாறை அருகேதொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தென்தாமரைகுளம்:
வழுக்கம்பாறை அருகே உள்ள மணவிளை எஸ்.என்.பெருமாள் நகரை சேர்ந்தவர் ஹரிஹரசுதன் (வயது24), தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு திருமணம் முடிந்து வனிஷா(20) என்ற மனைவியும், பிறந்து இரண்டு மாதமே ஆன ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஹரிஹரசுதன் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால் அவரது மனைவி கண்டித்து வந்தார்.
இந்தநிலையில் சுயஉதவிக் குழுவில் வனிஷாவின் பெயரில் அவரும், அவரது உறவினர் ஒருவரும் கடன் வாங்கினர். அதில் 2 தவணை செலுத்திய பின் உறவினர் சரியாக பணத்தை செலுத்தவில்லை. இதனால் ஹரிஹரசுதன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.
சம்பவத்தன்று ஹரிஹரசுதன் மது குடித்து விட்டு போதையில் பொற்றையடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த உறவினர்கள் சந்துரு, வசந்த் ஆகிய 2 பேரும் மோட்டார்சைக்கிளில் ஹரிஹரசுதனை அழைத்து சென்றனர். அப்போது, ஹரிஹரசுதன் மறைத்து வைத்திருந்த விஷத்தை குடித்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த 2 பேரும் அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஹரிஹரசுதன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி வனிஷா கொடுத்த புகாரின் பேரில் தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.