செங்கல்பட்டு
மாயமான மகளை கண்டுபிடித்து தரக்கோரி செல்போன் கோபுரம் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் - 1 மணி நேரம் போராடி போலீசார் மீட்டனர்
|மாயமான மகளை கண்டுபிடித்து தரக்கோரி செல்போன் கோபுரம் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் சிவக் குமார் (வயது 45). இவர் செங்கல்பட்டு மார்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 16 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிவக்குமார், அவரது மனைவி, மற்றும் 15 வயது மகள் ஆகியோர் சொந்த ஊரான திருமங்கலத்திற்கு சென்றிருந்தனர்.
அப்போது சிவக்குமாரின் மகள் மாயமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அவர் அளித்த நிலையில், புகார் அளித்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அவர் செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டினார். இதுகுறித்து தகவல் அறிந்து செங்கல்பட்டு டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி காணாமல் போன மகளை கண்டுபிடித்து தருவதாக அதிகாரிகள் சிவக்குமாரிடம் உறுதியளித்தனர்.
அதன்பின்னர், கீழே இறங்கி வந்த சிவக்குமாரை போலீசார் போலிஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மகளை கண்டுபிடித்து தரக்கோரி தந்தை செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் செங்கல்பட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.