பக்கத்து வீட்டு பெண்ணுக்கு தவறான செய்கை காட்டிய தொழிலாளி அடித்துக்கொலை
|பக்கத்து வீட்டு பெண்ணுக்கு தவறான செய்கை காட்டிய தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டார்.
சேலம்,
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் ரவி (வயது 57). கூலித்தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அவரது மனைவி கோபித்து கொண்டு சென்றுவிட்டார். இதனால் அவர் தனிமையில் இருந்து வந்துள்ளார்.
இதனிடையே, கடந்த மார்ச் மாதம் 12-ந் தேதி இவரது வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது தலை மற்றும் கண் அருகே காயத்துடன் ரவி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் மது போதையில் இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ரவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரை அடித்ததில் இறந்துள்ளார் என டாக்டர் கோகுலரமணன் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இதனால் ரவி கொலை செய்யப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது. இது குறித்து உதவி கமிஷனர் லட்சுமி பிரியா, கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ் மற்றும் சுபாஷ் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இறந்துபோன ரவி சம்பவத்தன்று பக்கத்து வீட்டில் வசிக்கும் சுமதியிடம் தவறான செய்கை காட்டியதாகவும், அப்போது தகராறு ஏற்பட்டு சுமதி மற்றும் அவரது மகன்கள் ஸ்டீபன், ராகுல் ஆகிய 3 பேரும் சேர்ந்து ரவியை ரீப்பர் கட்டையால் தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ரவி வீட்டில் உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு இருந்தபோது உயிரிழந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கன்னங்குறிச்சி போலீசார் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி சுமதி (40), அவரது மகன்கள் ஸ்டீபன் (23), ராகுல் பிரசாத் (20) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பக்கத்து வீட்டு பெண்ணுக்கு தவறான செய்கை காட்டிய தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.