< Back
மாநில செய்திகள்
தொழிலாளி அடித்து கொலை
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

தொழிலாளி அடித்து கொலை

தினத்தந்தி
|
5 Nov 2022 12:15 AM IST

கணபதியில் உள்ள மாநகராட்சி நகர்நல மைய வளாகத்தில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை

கணபதியில் உள்ள மாநகராட்சி நகர்நல மைய வளாகத்தில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தொழிலாளி

கோவை, கணபதி ராஜ வீதியைச் சேர்ந்தவர் வெங்கட் என்ற வெங்கடேஷ் (வயது 53), கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 14 வயதில் மகனும் உள்ளனர். வெங்கடேசுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் தினமும் மது குடித்துவிட்டு வந்து, வீட்டில் உள்ளவர்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். மேலும் மதுபோதையில் சாலையில் நடந்து செல்பவர்களிடமும் தகராறில் ஈடுபடுவது வாடிக்கையாக கொண்டிருந்தார்.

இதன்காரணமாக அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து வெங்கடேஷ் மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்று ராமநாதபுரத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் மகனுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெங்கடேஷ் வழக்கம்போல மது குடித்துவிட்டு கணபதி சங்கனூர் சாலையில் புதியதாக திறக்கப்பட்ட நகர்நல மைய வளாகத்தில் படுத்து கிடந்ததாக கூறப்படுகிறது.

அடித்து கொலை

இந்த நிலையில் நேற்று காலை மாநகராட்சி நகர் நல வளாகத்தில் வெங்கடேஷ் முகத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனை கண்ட பொதுமக்கள் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து வெங்கடேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தடயவியல் நிபுணர்கள் வந்து அந்த பகுதியில் உள்ள கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 பேர் வெங்டேஷ் உடன் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே சந்தேகத்தின் பேரில் போலீசார் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் எதற்காக வெங்கடேசை அடித்து கொலை செய்தனர்? முன் விரோதம் காரணமா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்