லஞ்சம் வாங்காமல் பணி செய்யுங்கள்... விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை அலறவிட்ட இந்தியன்-2
|இந்தியன்-2 திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
விழுப்புரம்,
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், சங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன்-2 திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் ஏழை, எளிய, பாமர மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதற்கும், வேலைவாய்ப்பு விஷயமாகவும் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை தேடிச்சென்று அவர்களை வர்மக்கலைகள் மூலம் கொலை செய்யும் பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார்.
லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் திருந்தவும், அவர்களுக்கு லஞ்சம் கொடுப்பவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இதன் திரைக்கதை அமைந்துள்ளது. இந்த நிலையில், இந்தியன்-2 என்று குறிப்பிட்டு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருந்த வாசகம் அதிகாரிகளையும், அலுவலர்களையும் அலறவிட்டுள்ளது.
அது பற்றிய விவரம் வருமாறு:-
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த நபர் ஒருவர், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆண்கள் கழிவறையின் கதவுக்கு பின்னால் இந்தியன்-2 என்று குறிப்பிட்டு ஒரு வாசகத்தை எழுதி ஒட்டியுள்ளார்.
அதில், அலுவலகத்திற்கு வரும் ஏழை, எளிய, பாமர மக்களின் குறைகளை பூர்த்தி செய்யுங்கள். ஏழை, எளிய மக்களின் கோரிக்கை மனுவை வாங்கி உதவி செய்யுங்கள். லஞ்சம் வாங்காமல் பணியை செய்யுங்கள் என்று எழுதப்பட்டு இருந்தது. அந்த வாசகத்தின் கடைசியில் இந்தியன்-2 என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை பார்த்த கலெக்டர் அலுவலக அதிகாரிகள், அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைகேட்பு கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு செல்கின்றனர். அவர்களில் கோரிக்கை நிறைவேறாத யாரோ ஒருவர், ஆத்திரத்தில், அரசு அதிகாரிகளுக்கு அச்சத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற வாசகத்தை எழுதி, கழிவறையின் கதவில் ஒட்டிவிட்டு சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
இருப்பினும் இதனை எழுதியவர் யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.