விழுப்புரம்
நீண்ட காலத்திற்கு தரமானதாக இருந்திடும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்
|அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் நீண்ட காலத்திற்கு தரமானதாக இருந்திடும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஹர்சகாய் மீனா அறிவுரை கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கு புதிய குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதை நேற்று மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை முதன்மை செயலாளருமான ஹர்சகாய் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கு நிரந்தரமான 440 புதிய குடியிருப்பு வீடுகள் ரூ.23.4 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இக்குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதி கடலோர பகுதி என்பதால் உப்புக்காற்றினால் குடியிருப்புகள் பாதிப்பு ஏற்படாத வகையில் வர்ணம் பூசப்பட்ட கட்டுமான கம்பிகள், சிமெண்டு கொண்டு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர், முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கு புதிய குடியிருப்பு வீடுகள் கட்டித்தருவதில் சிறப்பு கவனம் செலுத்தி வருவதால் நீண்ட காலம் இருந்திடும் வகையில் குடியிருப்பு வீடுகள் தரமான முறையில் கட்டப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.
அறிவுரை
அதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்சகாய் மீனா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சி.பழனி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்சகாய் மீனா கூறுகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சரால் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான திட்டங்களாக உள்ளது. எனவே அனைத்துத்துறை அலுவலர்கள், அரசின் திட்டங்கள் அனைத்தையும் விரைந்து மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல், நீண்ட காலத்திற்கு தரமானதாக இருந்திடும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.