திருவாரூர்
தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 307 பேருக்கு பணி ஆணை
|தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 307 பேருக்கு பணி ஆணை
திருவாரூரில் நடந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 307 பேருக்கு பணி ஆணைகளை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.
தனியார் வேலைவாய்ப்பு முகாம்
திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து திருவாரூர் நியூ பாரத் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமில் கலந்து கொண்டு தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார். இதில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணி அமர்த்தும் நோக்கத்தோடு திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
307 பேருக்கு பணிநியமன ஆணை
முகாமில் 2404 வேலை நாடுனர்களும், 96 வேலையளிக்கும் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு அலுவலர்களும் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான வேலை நாடுனர்களை தேர்வு செய்தனர். இதில் 307 வேலை நாடுனர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும் 160 வேலை நாடுனர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரசேகர், திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில், திருவாரூர் நகர்மன்ற உறுப்பினர்கள் செந்தில், பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.