< Back
மாநில செய்திகள்
இந்த மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை செலுத்தும் பணிகள் தொடக்கம்
மாநில செய்திகள்

இந்த மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை செலுத்தும் பணிகள் தொடக்கம்

தினத்தந்தி
|
14 Oct 2023 2:26 PM IST

இந்த மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது.

சென்னை,

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் ரூ.1,000 பெற்று பயன்பெறுவதற்காக 1 கோடியே 63 லட்சம் குடும்பத் தலைவிகள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் பயனாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு மாதம் ரூ.1,000 வங்கி கணக்கில் செலுத்தும் நிகழ்ச்சியை கடந்த மாதம் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதில், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் ரூ.1,000 வங்கி கணக்கிற்கு வராத குடும்பத் தலைவிகள், இ-சேவை மையங்கள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையங்களில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இதற்கிடையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இந்த மாதத்திற்கான தொகை வருகிற 14ம் தேதியே (இன்று) அவர்களுடைய வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு முன்னதாக அறிவித்து இருந்தது. 15-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஒருநாள் முன்கூட்டியே பயனாளிகளின் வங்கிக்கணக்கில் ரூ.1000 வரவு வைப்பதாக தமிழக அரசு தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்தபடி, இரண்டாவது மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமை தொகையை தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று இரவுக்குள் அனைவரது வங்கிகளிலும் பணம் செலுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்