செங்கல்பட்டு
சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் நடந்து வரும் பணி - மராட்டிய மாநில உள்ளாட்சி பிரதிநிதிகள் பார்வையிட்டனர்
|சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் நடந்து வரும் பணிகளை மராட்டிய மாநில உள்ளாட்சி பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.
மராட்டிய மாநிலத்தில் இருந்து மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனம் சார்பில் அந்த மாநில ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட 31 பேர் கொண்ட உள்ளாட்சி பிரதிநிதி குழுவினர் 4 நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வந்தனர்.
நேற்று முன்தினம் காட்டாங்கொளத்தூரில் உள்ள மத்திய அரசின் எஸ்.ஐ.ஆர்.டி.யில் ஒரு நாள் பயிற்சி முடித்து விட்டு 2-வது நாளான நேற்று காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் ஊராட்சி மன்ற செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டனர்.
தொடர்ந்து ரேஷன் கடைகள், அங்கன்வாடி மையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், திருத்தேரி சத்யாநகர் பகுதியில் உள்ள ரூபன் கட்டிடத்தில் இயங்கி வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் நடைபெற்று வரும் தையல் நிலையத்தையும் இந்த குழுவினர் நேரில் பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து திருக்கழுக்குன்றம் அருகேயுள்ள தண்டரை இருளர் பகுதிகளை பார்வையிட சென்றனர். முன்னதாக அவர்களை ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி துரை பாபு, துணைத்தலைவர் கே.பி.ராஜன், ஊராட்சி செயலாளர் ஆனந்தகுமார் வரவேற்றனர்.