அரியலூர்
இருசு குட்டையை அழகுபடுத்தும் பணி தொடங்கியது
|இருசு குட்டையை அழகுபடுத்தும் பணி தொடங்கியது.
அரியலூர்:
அரியலூர் நகரில் செந்துறை சாலை, கல்லூரி சாலை நான்கு ரோடு சந்திப்பில் உள்ள இருசு குட்டை, நகராட்சிக்கு சொந்தமானதாகும். இந்த குட்டையை ஆழப்படுத்தி கரையை உயர்த்தி நடைபயிற்சி செல்வதற்கான சிமெண்டு தளங்கள் அமைத்து பூங்காக்கள் அமைக்கும் பணி தொடங்கியது. ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்பில் இந்த குட்டையை அழகுபடுத்தும் பணி நடைபெறுகிறது. இதில் குட்டையின் நான்கு கரைகளும் பொக்லைன் எந்திரம் மூலம் உயர்த்தப்பட்டு, கற்கள் பதிக்கும் பணி தொடங்கப்பட உள்ளது.
பெரியார் நகர், ராஜாஜி நகர், காமராஜர் நகரில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் இந்த குட்டையில் தான் தேங்கும். இதனால் அழகுபடுத்தும் பணி நடைபெற்று முடிவடைந்த பிறகு மழைநீரும், கழிவுநீரும் கலந்து குட்டையில் தேங்கி துர்நாற்றம் வீசும் சூழ்நிலை உள்ளது. எனவே வீடுகளில் இருந்து வரும் கழிவுநீரை குட்டையின் கரைக்கு வெளியே செல்லும்வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது கழிவுநீர் பாதாள சாக்கடை வழியாக செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் நகரின் மையப் பகுதியில் உள்ள இந்த குட்டையில் துர்நாற்றம் வீசாமல் இருக்கும். கரைகளில் அமைக்கப்படும் நடைபயிற்சி பாதை, மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்கான இடங்களில் தூய்மையான காற்று வசதி கிடைக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.