ராமநாதபுரம்
மோசடி வேலைகளில் ஈடுபட வைத்து சித்ரவதை
|கம்போடியாவில் வேலை என்று கூறி அழைத்து சென்று மோசடி வேலைகளில் ஈடுபட வைத்து சித்ரவதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட வாலிபர் புகார் மனு அளித்தார்.
கம்போடியாவில் வேலை என்று கூறி அழைத்து சென்று மோசடி வேலைகளில் ஈடுபட வைத்து சித்ரவதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட வாலிபர் புகார் மனு அளித்தார்.
மனு
ராமநாதபுரம் மாவட்டம் பிரபுக்களுர் தெற்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் என்பவரின் மகன் நீதிராஜன் (வயது28). இவர் நேற்று ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நானும் எங்கள் பகுதியை சேர்ந்த அசோக் என்பவரும் வெளிநாட்டில் வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தோம். அப்போது கொழுந்துறை கிராமத்தை சேர்ந்த நைனா முகமது என்பவரின் மனைவி சையது ரூஹானி என்பவர் தன்னுடைய மகன் மகாதீர் முகமது கம்போடியாவில் நல்ல வேலையில் இருப்பதாகவும் மேலும் ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் ஏஜெண்டாக இருப்பதாகவும் அவரை தொடர்பு கொண்டால் நல்ல வேலை கிடைக்கும் என கூறினார்.
அவரின் நம்பிக்கை அளிக்கும் பேச்சைநம்பி அவரின் மகனிடம் தொடர்பு கொண்டு பேசியபோது கம்போடியா நாட்டில் டேட்டா என்ட்ரி வேலை வாங்கித் தருவதாகவும் நல்ல சம்பளம் தருவார்கள் என்றும் ஆசை வார்த்தை கூறியதோடு அதற்காக தலா ரூ.2½ லட்சம் பணம் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை வாங்கினார். அதன் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் கம்போடியாவுக்கு சென்ற போது மகாதீர் முகமது தங்களை சந்தித்து பாஸ்போர்ட்டை வாங்கிக்கொண்டு சீனா நிறுவனத்திடம் வேலைக்கு சேர்த்து விட்டார். அங்கு விசாரித்தபோது மகாதீர் முகம்மது 3 ஆயிரம் டாலருக்கு எங்களை விற்று விட்டதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். பின்னர் எங்களை ஆன்லைன் மோசடி வேலைக்கு பயன்படுத்தி நூதன மோசடி வேலைகளில் ஈடுபட சொன்னார்கள். அதற்கு நாங்கள் மறுத்தபோது கரண்ட் ஷாக் கொடுத்ததோடு அடித்து கொடுமைப்படுத்தினர்.
அபராதம்
எங்களை போன்று வேறுவழியின்றி ஏராளமான தமிழர்கள் அங்கு தவறான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு கட்டத்தில் எங்கள் நிலை குறித்து இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் அவர்கள் மீட்டனர். சட்டவிரோதமாக டூரிஸ்ட் விசாவில் வந்து தங்கி இருந்த தற்காக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் செலுத்தியதோடு விமான கட்டணம் செலுத்தி சொந்த ஊருக்கு வந்து சேர்ந ்தோம். எங்களை ஏமாற்றி பணத்தை பெற்று கொண்டு சீன நிறுவனத்திடம் விற்றுவிட்ட மோசடி வேலைகளில் ஈடுபட வைத்து சித்ரவதை அனுபவிக்க வைத்த மகாதீர் முகமது மற்றும் அவரின் தாய் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.