விருதுநகர்
தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை
|தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
அருப்புக்கோட்டை,
தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
பூமி பூஜை
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சேதுராஜபுரம் ஊராட்சியில் புதிய கலையரங்கம் கட்டும் பணிகளுக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து போடம்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தையும், கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் நல மையத்தையும், ஆத்திபட்டி பெத்தம்மாள் நகர் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடையையும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
உரிமைத்தொகை
அப்போது அவர் கூறியதாவது:-
மகளிர் உரிமைத்தொகை உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் அதற்கான காரணம் என்னவென்று உங்களது செல்போனில் தகவல் தெரிவித்து இருப்பார்கள்.
மகளிர் உரிமை தொகை கிடைக்க பெறாதவர்கள் தாசில்தார் அலுவலகம் அல்லது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சென்று அங்கு பணி மேற்கொள்பவர்களிடம் சென்று அதற்கான காரணம் என்னவென்று கூறினால் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
தகுதி இருக்கும் விடுபட்ட மகளிர் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கல்வி உபகரணங்கள்
முன்னதாக கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்து குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுப்பாராஜ், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ரமேஷ், ஒன்றிய குழு தலைவர் சசிகலா, ஒன்றிய செயலாளர்கள் பாலகணேஷ், பொன்ராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகு ராமானுஜம், முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவபிரகாசம், தி.மு.க. நகர செயலாளர் மணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சேதுராஜபுரம் தங்கஅழகு, செட்டிகுறிச்சி பிரபாகரன், கஞ்சநாயக்கன்பட்டி நாகஜோதி, கட்டங்குடி மகாலட்சுமி, பாளையம்பட்டி முத்துலட்சுமி, தாசில்தார் அறிவழகன், வட்டார வளர்ச்சி அலுவலர் காஜா மைதீன் பந்தே நவாஸ், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.