< Back
மாநில செய்திகள்
சென்னை நுங்கம்பாக்கத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களின் பொருட்கள் விற்பனை கண்காட்சி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
சென்னை
மாநில செய்திகள்

சென்னை நுங்கம்பாக்கத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களின் பொருட்கள் விற்பனை கண்காட்சி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

தினத்தந்தி
|
31 Dec 2022 11:50 AM IST

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களின் பொருட்கள் விற்பனை கண் காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் சுயஉதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனை கண்காட்சியினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்த அவருக்கு தாரை தப்பட்டை முழங்க கிராமியப்புற நடன கலைஞர்களின் கலைநிகழ்ச்சியுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கண்காட்சியை தொடங்கிவைத்த உதயநிதி ஸ்டாலின், ஒவ்வொரு அரங்காக சென்று பார்வையிட்டு, பொருட்களின் விலை மற்றும் தயாரிப்பு விவரங்களை கேட்டு அறிந்தார். அப்போது, மகளிர் சுயஉதவி குழுவினரின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டு அறிந்தார். மேலும், அவர்களின் தயாரிப்பு பொருட்களை வாங்கியும் மகிழ்ந்தார்.

இந்த கண்காட்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் மகளிர் சுயஉதவி குழுக்களின் தயாரிப்பு பொருட்களான முந்திரி பருப்பு வகைகள், மசாலா பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், உடன்குடி கருப்பட்டி, கற்கண்டு, குமரி மாவட்டத்தின் தேங்காய் மற்றும் கடற்சிப்பிகளால் செய்யப்பட்ட கைவினை பொருட்கள், சுடுமண் சிற்பங்கள், கால் மிதியடிகள், பட்டு மற்றும் பருத்திப் புடவைகள், கண்ணாடி ஓவியங்கள், கைவினை பொருட்கள், பனை ஓலைப் பொருட்கள், பொம்மைகள், காபி தூள், மிளகு, இயற்கை மூலிகைகள், செயற்கை ஆபரணங்கள், சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள், பரிசுப் பொருட்கள், ஆயத்த ஆடைகள், மரச்சிற்பங்கள், இயற்கை உரங்கள், தேன், கடலை மிட்டாய், மூலிகை பொடிகள் உள்ளிட்ட ஏராளமான வகையிலான பொருட்கள் இடம் பெற்று இருந்தன.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத துணிப் பைகள், மஞ்சப் பைகள் விற்பனை செய்யும் அரங்குகளும் இடம் பெற்றிருந்தன. பாரம்பரிய சுவை மிகுந்த உணவுகளை உண்டு களித்திட உணவு அரங்கமும் அமைக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 51 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் 6 அரங்குகள் உணவகங்களாக செயல்பட்டன. அங்கு சிறுதானிய உணவுகளும், பலகாரங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

கண்காட்சியின் தொடக்க விழாவில் தயாநிதி மாறன் எம்.பி., சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு முதன்மை செயலாளர் பெ.அமுதா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சா.திவ்யதர்ஷினி, செயல் இயக்குனர் பிரியங்கா பங்கஜம், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் முதன்மை இயக்க அலுவலர் எம்.அருணா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கண்காட்சியானது வருகிற ஜனவரி 12-ந் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்