சென்னை
தேனாம்பேட்டையில் மகளிர் சுயஉதவி குழு பெண் மீது பெட்ரோல் ஊற்றி மிரட்டி பணம் கொள்ளை - முகமூடி கொள்ளையன் அட்டூழியம்
|சென்னை தேனாம்பேட்டையில் மகளிர் சுய உதவி குழு பெண்ணிடம், பெட்ரோல் ஊற்றி மிரட்டி பணத்தை கொள்ளை அடித்து சென்ற முகமூடி கொள்ளையனை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னை தேனாம்பேட்டை, நக்கீரன் தெருவைச் சேர்ந்தவர் புனிதா (வயது 38). இவர் மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினராக உள்ளார். இவர், நேற்று மகளிர் சுய உதவி குழுவில் பணம் கட்டுவதற்கு, தனது வீட்டு வாசலில் உட்கார்ந்து பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு முகமூடி அணிந்த மர்மநபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
புனிதா மீது அவர் திடீரென்று பெட்ரோலை ஊற்றினார். சத்தம் போட்டால் தீ வைத்து கொளுத்தி விடுவேன் என்று அந்த ஆசாமி புனிதாவை மிரட்டினார்.
புனிதா சுதாரிப்பதற்குள், அவர் கையில் வைத்திருந்த ரூ.42 ஆயிரத்தை மின்னல் வேகத்தில் கொள்ளை அடித்துக் கொண்டு, முகமூடி ஆசாமி மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக புனிதா, தேனாம்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையனின் உருவத்தை அடிப்படையாக வைத்து, போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.