திருவள்ளூர்
மகளிர் சுயஉதவி குழுவினர் மீது மோட்டார் சைக்கிளால் மோதி ரூ.1¾ லட்சம் பறிப்பு
|மகளிர் சுயஉதவி குழுவினர் மீது மோட்டார் சைக்கிளால் மோதி ரூ.1¾ லட்சம் பறிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கல்பட்டு ஊராட்சி ஆவாஜிப்பேட்டை எம்.ஜி.எம் நகரில் வசித்து வருபவர் காயத்ரி (வயது 33). மகளிர் சுய உதவி குழு உறுப்பினர். இவரும் மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த ஜோதிமா என்பவரும் நேற்று முன்தினம் காலை பெரியபாளையத்தில் உள்ள எல்.அண்ட்.டி பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கடன் பெற்றனர். இந்த தொகைக்கு காசோலை வழங்கப்பட்டது. இதனை அவர்கள் வெங்கல் கிராமத்தில் உள்ள கனரா வங்கியில் பணமாக பெற்றனர்.
பின்னர் காயத்ரி தனது பையில் பணத்தை வைத்து கொண்டு பஸ் மூலம் இருவரும் வெங்கல்-சீதஞ்சேரி நெடுஞ்சாலையில் கல்பட்டு கூட்டுச்சாலையில் வந்து இறங்கினார். அங்கிருந்து தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காயத்ரி, ஜோதிமா ஆகியோர் மீது மோதினர். பின்னர், அவர்களது கையில் இருந்த பணப்பையை பறித்து கொண்டு தப்பிச்சென்றனர். இது குறித்து காயத்ரி பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.