மகளிர் இடஒதுக்கீடு: ஓட்டு வங்கிக்காக பாஜக அரங்கேற்றம் - காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கருத்து
|9½ ஆண்டுகளுக்கு பிறகு ஓட்டு வங்கிக்காக பா.ஜ.க. நிறைவேற்றியுள்ளதாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவித்து உள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் லாவண்யா பல்லால் ஜெயின் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ராஜீவ் காந்தியின் கனவு திட்டமாகும். 35 ஆண்டுகளுக்கும் மேலாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வர வலியுறுத்தியது காங்கிரஸ் கட்சி என்பதால் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதில் நாங்கள் தான் வெற்றியாளர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி காலத்தில் இருந்தே பல்வேறு முறை இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போதும் போதுமான ஆதரவு கிடைக்காததால் இதை வெற்றி பெறச் செய்ய முடியவில்லை. துரதிர்ஷ்டவசமாக பா.ஜ.க. அறுதி பெரும்பான்மையுடன் இருக்கும் இந்த வேளையில் பல்வேறு மசோதாக்களை விவாதம் இன்றி நிறைவேற்றி வருகின்றனர்.
ராஜீவ்காந்தி, நரசிம்மராவ், தேவகவுடா, மன்மோகன்சிங் ஆட்சி காலங்களில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்கள் கொண்டு வர நினைத்த அதே மசோதாவிற்கு பா.ஜ.க. மறுபெயர் சூட்டியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் 9½ ஆண்டுகளுக்கு பிறகு இப்போது இந்த மசோதாவை ஓட்டு வங்கிக்காக பா.ஜ.க. அரங்கேற்றி உள்ளது.
மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகும் தொகுதி மறு வரையறைக்காகவும், மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காகவும் எதற்காக காத்திருக்க வேண்டும். இந்த இட ஒதுக்கீடு மசோதாவில் ஓ.பி.சி. பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு உள்ள பங்கு என்ன என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சி காலத்திற்கு பிறகு பல்வேறு மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோத வழங்கப்பட்டாலும், தமிழ்நாட்டில் தான் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு முதன்முதலாக 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏ. ஹசன் மவுலானா, மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஏ.வாசு, மாநில செயலாளர் அகரம் கோபி, மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் சிந்துஜா மற்றும் டாக்டர் ஆல்பர் மதியரசு உள்பட பலர் உடன் இருந்தனர்.