திண்டுக்கல்
அரசு மதுக்கடையை அகற்றக்கோரி பெண்கள் போராட்டம்
|பழனி அருகே, அரசு மதுக்கடையை அகற்றக்கோரி பெண்கள் போராட்டம் நடத்தினர்.
பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு செல்லும் வழியில், அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர் வருகை தந்து மதுபானம் குடிக்கின்றனர். இவர்கள் சாலையோரத்தில் அமர்ந்து மதுபானம் குடிப்பதும், போதை தலைக்கு ஏறியதும் தகராறில் ஈடுபடுவதும் வாடிக்கையாக உள்ளது.
நாளுக்குநாள் அதிகரித்து வரும் குடிமகன்களால் வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளிக்கு செல்லும் மாணவிகள் ஆகியோருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இந்த மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்னம்மாள் என்பவரை கொலை செய்த நபர்களை கைது செய்ய வேண்டும். மேலும் பெத்தநாயக்கன்பட்டி கிராமத்துக்கு அரசு பஸ் வந்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் அங்கு திரண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பழனி தாலுகா போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.