நாமக்கல்
நாமக்கல்லில் மாதர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்
|குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி வீ.மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் அப்பகுதியை சேர்ந்த சில பெண்களை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதன்பேரில் குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். முருகேசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட தலைவர் சரசு தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அன்புமணி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர்.