கடலூர்
கல்லூரிகளுக்கு இடையேயான பெண்கள் நீச்சல் போட்டி
|கடலூரில் கல்லூரிகளுக்கு இடையேயான பெண்கள் நீச்சல் போட்டி நடைபெற்றது..
திருவள்ளுவர் பல்கலைக்கழக அளவில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மண்டலங்களுக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான பெண்கள் நீச்சல் போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு அரங்க நீச்சல் குளத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட 10 கல்லூரிகளில் இருந்து வந்திருந்த 35 -க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டிக்கு கடலூர் அண்ணா விளையாட்டு அரங்க நீச்சல் பயிற்சியாளர் ரமேஷ், நடுவராக செயல்பட்டு சிறந்த நீச்சல் வீராங்கனைகளை தேர்வு செய்தார்.
சிறந்த வீராங்கனைகள் தேர்வு
இந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த வீராங்கனைகள், அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடக்கும் போட்டியில் பங்கு பெற தகுதி பெறுவார்கள். இதில் பெண்கள் ஒருங்கிணைப்பாளர்கள் வரலட்சுமி, யோகபிரியா, மூத்த உடற்கல்வி இயக்குனர்கள் ராஜமாணிக்கம், புவனேஸ்வரி, உடற்கல்வி இயக்குனர்கள் மகாலட்சுமி, ஜானகி, மகேஸ்வரி, தி.குமணன், டேக்வாண்டோ பயிற்சியாளர் இளவரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருவெண்ணெய்நல்லூர் அரசு கலைக்கல்லூரி செய்திருந்தது.