< Back
மாநில செய்திகள்
மகளிர் உரிமைத்தொகை - தமிழக அரசு புதிய அறிவிப்பு
மாநில செய்திகள்

மகளிர் உரிமைத்தொகை - தமிழக அரசு புதிய அறிவிப்பு

தினத்தந்தி
|
22 Oct 2023 9:07 AM IST

மகளிர் உரிமைத்தொகை குறித்த புதிய அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தனது தேர்தல் அறிக்கையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.1,000 மாதந்தோறும் கலைஞர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

இதன் மூலம் தமிழகம் முழுவதும் பல லட்சம் குடும்ப தலைவிகள் பயன்பெற்றனர். இதில் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற மனு செய்யப்பட்டவர்களின் பலரது மனுக்கள் தள்ளுபடி ஆனது. இவர்களில் தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டு, இதற்கான மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த திட்டம் குறித்த புதிய அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பயனாளிகளின் தகுதி உறுதிப்படுத்தப்படும். வருமானம், இறப்பு பதிவு, வாகன பதிவு உள்ளிட்ட தரவுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் ஜி.எஸ்.டி., சொத்து வரி, தொழில்வரிகள் உள்ளிட்ட தரவுகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வுகளின் போது தகுதி இழக்கும் பயனாளிகள் தானியங்கி புதுப்பித்தல் முறையில் நீக்கப்படுவார்கள். அவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்