"மகளிர் உரிமை தொகை சிறப்பு முகாம்" - அதிகாரிகளுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்
|மகளிர் உரிமை தொகை சிறப்பு முகாம் தொடர்பாக அதிகாரிகளுக்கு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை,
மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்துக்கான பயனாளிகளை சிறப்பு முகாம்களின் மூலம் தோ்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பயனாளிகளிடம் இருந்து போதுமான ஆவணங்கள், தகவல்கள் ஆகியவையும் முகாம்களின்போதே திரட்டப்பட உள்ளன. இந்தப் பணிகளை ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உரிமைத் தொகையை சுமாா் ஒரு கோடி மகளிருக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ரூ.1,000 உரிமைத் தொகையை யாருக்கெல்லாம் வழங்குவது, எப்படி கணக்கெடுப்பு நடத்துவது என்பன குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் தயாரிக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் திட்டத்துக்கான சிறப்புப் பணி அதிகாரியாக இளம் பகவத் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளாா்.
மாநிலம் முழுவதும் வருவாய்த் துறை அலுவலா்களைக் கொண்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களுக்கான ஏற்பாடுகளை மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் செய்து தர வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முகாம்களின் மூலம், பெண்களிடம் இருந்து உரிய தகவல்கள் கேட்டுப் பெறப்பட உள்ளன. குறிப்பாக, எந்த வகை குடும்ப அட்டை வைத்துள்ளனா், ஆதாா் எண், குடும்ப உறுப்பினா்களின் தொழில் உள்ளிட்ட அடிப்படை விவரங்கள், வங்கிக் கணக்கு எண் போன்றவை கோரப்பட உள்ளன.
இந்த நிலையில் மகளிர் உரிமை தொகை சிறப்பு முகாம் தொடர்பாக அதிகாரிகளுக்கு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
மகளிர் உரிமை தொகை தொடர்பாக ரேஷன் கடை'அளவில் சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும். ஒரு பயனாளி கூட விடாமல் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.
குடும்ப அட்டை , வயது வரம்பு , ஆண்டு வருமானம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமை தொகை அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என அறிவுறுத்தியுள்ளார்.