மதுரை
மகளிர் உரிமைத்தொகை திட்ட பணிகள் 26-ந் தேதி முதல் முழுமையாக புறக்கணிப்பு- வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அறிவிப்பு
|மகளிர் உரிமைத்தொகை திட்ட பணிகள் 26-ந் தேதி முதல் முழுமையாக புறக்கணிக்கப்படும் என வருவாய்த்துறை அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது.
மகளிர் உரிமை திட்டப்பணிகள்
தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் முருகையன், மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருவாய்த்துறை அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் 26-ந் தேதி மாலை 4.45 மணிக்கு அலுவலகங்களில் இருந்து வெளிநடப்பு செய்து மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். 26-ந் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டப்பணிகள் முழுமையாக புறக்கணிப்பு செய்கிறோம். அடுத்த மாதம் 21-ந் தேதி 14 ஆயிரம் வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்கும் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தப்படும். கடந்த 19-ந் தேதி கள்ளக்குறிச்சியில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மகளிர் உரிமை திட்டத்திற்கு உடனடியாக பணியிடம் ஏற்படுத்த வேண்டும். புதிய பணியிடங்களுக்காக ஏற்கனவே உள்ள பணியிடங்களை "கலைக்க" முயற்சிப்பது கூடாது.
போராட்டம்
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பணியிறக்கம் பெற்ற அலுவலர்களுக்கான பதவி உயர்வு பணி பாதுகாப்புக்காக அரசாணை வெளியிட வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும். ஈட்டிய விடுப்பு, ஒப்படை ஊதியம் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி "ஜாக்டோ ஜியோ" சார்பில் நடைபெறும் அனைத்து போராட்டங்களிலும் வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கு கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் மதுரை மாவட்ட தலைவர் கோபி, செயலாளர் முகைதீன், பொருளாளர் முத்துப்பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.