மகளிர் உரிமைத் தொகை... யாருக்கெல்லாம் ரூ. 1000... இப்படிதான் தேர்வு செய்யப்படும்
|மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது.
சென்னை,
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக கலந்துகொண்டு பேசினார். மேலும் பல்வேறு அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
வருகிற செப்டம்பர் 15ந்தேதி முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது. அதற்கு முன்னதாக பயனாளிகளை தேர்ந்தெடுக்க அனைத்து ரேஷன் கடை அருகிலும் சிறப்பு முகாம் நடத்துவது, உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதில், குடும்ப அட்டை, வயது வரம்பு, ஆண்டு வருமானம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மகளிர் உரிமைத்தொகை பெற பயனாளிகளுக்கான தகுதிகளை தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதில்,
மகளிர் உரிமைத்தொகை பெற பயனாளிகளுக்கான தகுதிகள்
*குடும்ப அட்டையில் குடும்பத்தலைவராக குறிப்பிட்டுள்ள பெண், குடும்பத்தலைவியாக கருதப்படுவர்
*ஆண், குடும்பத்தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால், அவரின் மனைவி குடும்பத்தலைவியாக கருதப்படுவர்
*திருமணமாகாத, தனித்தபெண்கள், கைம்பண்கள், திருநங்கைகள் குடும்பத்தலைவிகளாக கருதப்படுவர்
*குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் குடும்பத்தினர் ஒருவரை தேர்வுசெய்து விண்ணப்பிக்கலாம்
* எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ, அந்த கடையில் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
*பொருளாதார தகுதிக்கான தனியாக வருமானச் சான்று அல்லது நில ஆவணங்களை இணைக்க தேவையில்லை
*ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்
*ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்
* மகளிர் உரிமைத்தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும்.. உச்சபட்ச வயது ஏதுமில்லை.
யார் யாருக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடையாது.?
*5 ஏக்கர் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 இல்லை
*வருமான வரி செலுத்துவோர் மற்றும் தொழில்வரி செலுத்துவோர்
*சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் உள்ளோருக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடையாது.
*பெண் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், பெண் அரசு ஊழியர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிவாய்ந்த பெண்களுக்கு உரிமைத்தொகை அவர்களுடைய வங்கிக்கணக்கில் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்தத் திட்டத்துக்கான சிறப்புப் பணி அதிகாரியாக இளம் பகவத் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.