< Back
மாநில செய்திகள்
வெற்றிக்கொடி நாட்டிவரும் பெண்கள்
நாமக்கல்
மாநில செய்திகள்

வெற்றிக்கொடி நாட்டிவரும் பெண்கள்

தினத்தந்தி
|
8 March 2023 12:15 AM IST

கடந்து சாதனை மங்கைகளாக ஜொலிக்கும் மகளிர் குல மாணிக்கங்களையும், அவர்களின் எதிர்பார்ப்புகளையும் இங்கே காணலாம்.

பெண்கள் எல்லாத்துறைகளிலும் இப்போது வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்கள். 'எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லைகாண்' எனும் மகாகவி பாரதியின் வரிகளுக்கு ஏற்ப, அவர்கள் சாதனை நிகழ்த்திக்கொண்டு இருக்கிறார்கள்.

பொறுமை, தியாகம், துணிச்சல், விடாமுயற்சி, விட்டுக்கொடுத்தல், உறவுகளை பேணல் என நற்பண்புகள் நிறைந்த தாய்க்குலத்தின் பெருமையைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

மகளிர் குல மாணிக்கங்கள்

தாய், மனைவி, மகள், சகோதரி, தோழி என உறவின் அனைத்து நிலைகளிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். இந்த பாத்திரங்களில் எதையும் நிராகரித்து எந்த ஆணாலும் வாழ்ந்து விட முடியாது. 'உலகம் அனைத்தையும் கட்டி காப்பாற்றி, அமுதூட்டி வரும் நூல்கள், கலைகள், கலைமன்றங்கள் யாவும் பெண்களே' என்றார் ஷேக்ஸ்பியர். அந்தளவு உலகில் சிறப்புக்குரியவர்கள் பெண்கள்தான். அதனால்தான் நதிகள் தொடங்கி மலைகள் வரை பெண்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கிறது.

'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?' என்ற நிலையெல்லாம் கடந்து, இன்று பெண்கள் ஆண்களுக்கு நிகராக, ஏன் ஆண்களுக்கே சவால் விடும் பணிகளில் கோலோச்சி வருகிறார்கள். இன்று அவர்கள் தொடாத உயரமே இல்லை, எட்டாத உச்சம் இல்லை. சர்வதேச மகளிர் தினம் கொண்டாடும் இந்த வேளையில், ஆண்களுக்கு இணையாக பல்வேறு துறைகளிலும் கோலோச்சும், சாதனை படைத்து வரும் மகளிர் திலகங்களை இன்றைக்கு பார்க்க இருக்கிறோம். இடர்ப்பாடுகளையும், சிக்கல்களையும் கடந்து சாதனை மங்கைகளாக ஜொலிக்கும் மகளிர் குல மாணிக்கங்களையும், அவர்களின் எதிர்பார்ப்புகளையும் இங்கே காணலாம்.

தன்னம்பிக்கை பிறந்தது

ராசிபுரம் நகராட்சி தலைவர் கவிதா சங்கர்:-

தமிழகத்தை ஒரு நாட்டிற்கு உரிய கட்டமைப்போடு உருவாக்கி கொண்டு இருக்கும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய முயற்சியால், உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தந்ததால், பெண்களுக்கு மனதளவில் பெரும் தன்னம்பிக்கை பிறந்தது. இதன்மூலம் வாழவும், ஆளவும் தங்களாலும் முடியும் என தன்னம்பிக்கையை தந்திருக்கிறது.

பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் பயணம் என்கிற திட்டத்தினால், ஒரு குடும்ப தலைவியின் மாத வருமானம் ரூ.7,500 என்றால், அவை முழுவதுமாக அக்குடும்பத்திற்கு பயன்படுகிறது. ஒரு பெண் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்தால், அந்நாட்டின் உடைய பொருளாதாரமும், முன்னேற்றம் அடையும் என்பதில் ஐயமில்லை. இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தின் வாயிலாக கொரோனா காலகட்டத்தில் கல்வியால் ஏற்பட்ட தொய்வை அகற்றியதோடு மட்டும் அல்லாமல், தற்போது அவர்களில் தகுதியான நபர்களுக்கு பள்ளி ஆசிரியை என்கிற வேலைவாய்ப்பை வழங்கி இருக்கிறது திராவிடமாடல் ஆட்சி.

பெண்கள் எந்தவொரு நிலையிலும், தொய்வடைந்து விடக்கூடாது. அவர்கள் வாழ்வியல் ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற நோக்கத்தோடு, திராவிட மாடல் ஆட்சியின் புதிய முயற்சியாக பெண் தொழில் முனைவோரை உருவாக்கிட தமிழ்நாடு ஸ்டார்ப் அப் அமைப்பு தொழிலணங்கு என்ற திட்டத்தை செயல்படுத்தியது. கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 என்ற அடிப்படையில் புதுமைபெண் திட்டம் மகளிரின் மனதில் நிறைந்த மகத்தான திட்டம் ஆகும்.

உடல் நலத்தில் கவனம்

நாமக்கல்லை சேர்ந்த குழந்தைகள் மருத்துவர் அபிநயா மதன்குமார்:-

பெண்கள் அனைவருக்கும் வருடத்தில் சில நாட்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். உதாரணமாக பிறந்த நாள், திருமண நாள், குழந்தைகளின் பிறந்த நாள் போன்று. இந்த நாட்கள் மட்டும் இல்லாமல் மகளிர் தினத்தையும் சிறப்பாக கருத வேண்டும் என்று எண்ணுகிறேன். திருமணமான பெண்கள் சிலர் முக்கியமாக தங்கள் குழந்தைகள், கணவர், வீட்டில் உள்ள பெரியவர்களை கவனித்து கொண்டு, தங்களை கவனித்து கொள்வதில்லை.

இந்த மகளிர் தினத்தில் இருந்து நாம் நம் உடல் நலம், மன நலம் இரண்டையுமே கவனிக்க வேண்டும் என்பதை உணர வேண்டும். தினமும் நம் நலம் கவனிக்க 1 மணி நேரம் மட்டும் செலவழித்தால் போதும். இந்த 1 மணி நேரத்தில் 45 நிமிடம் உடல் நலத்திற்காக சிறந்த உடற்பயிற்சி, நடைபயிற்சி, சும்பா நடனம் போன்றவற்றில் அவரவர் வசதி போல் செய்யலாம். 15 நிமிடம் மன அழுத்தம் குறைய தியானம் செய்யலாம். 24 மணி நேரத்தில் ஒரு மணி நேரம் நாம் நமக்காக செலவு செய்வதில் எந்த ஒரு சுய நலமும் இல்லை என்று நாம் உணர வேண்டும். அது மட்டும் இல்லாமல், வருடத்தில் ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து, நம் உடல் நலத்தில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்பதையும் கண்டறியலாம்.

சாதனையாளராக மாற்றக்கூடிய வல்லமை

எருமப்பட்டி பேரூராட்சி 5-வது வார்டு உறுப்பினர் விஜயா:-

இந்த சிறப்புமிக்க பெண் இனத்தில் நாங்களும் அங்கம் வகிக்கிறோம் என்பது மகிழ்ச்சி. இந்த மகளிர் தினத்தில் பெண்களை பெண்களாக மதிக்கும் போக்கு அனைவருக்கும் வர வேண்டும். இந்த மகளிர் தினம், சமுதாய குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும், மாற்றத்தை எதிர்நோக்கிய முக்கிய தடமாகவும் இருக்கட்டும். அதேவேளை பெண்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டுவந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

ஆண்களுக்கு சமமாக பெண்கள் எந்த பணியையும் செய்து விட முடியும். ஆனால் பெண்களுக்கு நிகராக ஆண்கள் வீட்டை நிர்வகிக்க முடியாது. நம் எதிர்கால தலைமுறை ஒழுக்கத்தோடு கண்ணியமாக வளர வேண்டுமென்றால் அது பெண்கள் கையில் தான் இருக்கிறது. நல்ல முறையில் குழந்தைகளை வளர்த்து எதிர்கால தலைமுறையை சாதனையாளர்களாக மாற்றக்கூடிய வல்லமை கொண்ட பெண்கள் அனைவருக்கும் உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

வெற்றி நிச்சயம்

கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளி காவேரி:-

குடும்ப வறுமையின் காரணமாக என்னால் மேல்படிப்பு படிக்க முடியவில்லை. எனவே தந்தையின் தொழிலை நானும் செய்ய தொடங்கினேன். ஒரு நாளைக்கு 40 முதல் 50 துணிகள் வரை என்னால் இஸ்திரி செய்ய முடியும். இதன் மூலம் சுமார் ரூ.300 வரை கிடைக்கிறது. என்றாலும், இஸ்திரி பெட்டிக்காக வாங்கும் கரியின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கிலோ ரூ.35 வரை கொடுத்துத்தான் வாங்க வேண்டியுள்ளது. அதுவும் சரியாக கிடைக்கவில்லை.

பெண்கள் எந்த வேலை செய்தாலும், தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கவுரவம் தருவோம்

சர்வதேச மகளிர் தினம் என்ற ஒரு நாளை மட்டும் கொண்டாடிவிட்டு, அந்த நாளில் மட்டும் பெண்களை பெருமைப்படுத்துவது மட்டும் நம் இலக்காகி விடக்கூடாது. அது எந்த பயனையும் தந்துவிடாது. பெண்கள் இந்த சமூகத்தின் ஓர் அங்கம். அவர்கள் இந்த சமூகத்தின் உணர்வு, உயிர், கவுரவமும் கூட. பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் எல்லா நிலைகளிலும் ஆண்கள் தரும் கவுரவமே, மகளிர் தின உறுதிமொழியாக இருக்கட்டும். வாழ்நாளெல்லாம் போற்றுதலுக்குரிய சிறப்புமிக்க பெண் இனத்துக்கு மகளிர் தின வாழ்த்துகள்.

மேலும் செய்திகள்