திருவள்ளூர்
சம்பளம் வழங்காததை கண்டித்து தொழிற்சாலையில் பெண் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
|சம்பளம் வழங்காததை கண்டித்து தொழிற்சாலையில் பெண் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த சூரப்பூண்டி பகுதியில் ஆடைகள் தைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் தொழிற்சாலை இயங்கி வந்தது. இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 150 பெண் தொழிலாளர்களும், 30 ஆண் தொழிலாளர்களும் வேலை செய்து வந்தனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொழிற்சாலை மூடப்பட்ட நிலையில், இங்கே வேலை செய்து வந்தவர்களுக்கு கடந்த 2½ மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நிலுவையில் உள்ள சம்பளத்துடன் இந்த மாதம் சம்பளமும் சேர்த்து வழங்குவதாக தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் சம்பளத்தை வழங்கவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெண் தொழிலாளர்கள் தொழிற்சாலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி தலைமையில் பாதிரிவேடு போலீசார் தொழிற்சாலை நிர்வாகத்தினர் முன்னிலையில் பேச்சு வார்த்தையில் நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், பெண் தொழிலாளர்கள் தங்களது உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.