< Back
மாநில செய்திகள்
ஊரப்பாக்கம் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பாரை சூறையாடிய பெண்கள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

ஊரப்பாக்கம் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பாரை சூறையாடிய பெண்கள்

தினத்தந்தி
|
15 May 2023 7:02 AM IST

ஊரப்பாக்கம் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பாரை பெண்கள் சூறையாடினார்கள்.

முற்றுகை

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே காரணைப்புதுச்சேரி செல்லும் சாலையில் உள்ள சுடுகாடு எதிரே டாஸ்மாக் கடை மற்றும் மது குடிக்கும் பார் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென டாஸ்மாக் கடைக்குள் நுழைந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கடையை மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை பொருட்படுத்தாமல் டாஸ்மாக் கடை ஊழியர் தொடர்ந்து மது விற்று கொண்டிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் அங்கிருந்த காலி பீர் பாட்டில்களை எடுத்து டாஸ்மாக் கடை வாசலில் போட்டு உடைத்தனர்.

இதனை தொடர்ந்து டாஸ்மாக் கடை ஊழியர் மது விற்பனையை நிறுத்திவிட்டு கடையின் இரும்பு ஷட்டரை பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதனை தொடர்ந்து டாஸ்மாக் கடை அருகில் இருந்த மதுபான பாருக்குள் நுழைந்த பெண்கள் அங்கு இருந்த மேசை, நாற்காலி போன்றவற்றை அடித்து நொறுக்கி பாரை சூறையாடினார்கள். அப்போது அங்கு மது குடித்து கொண்டிருந்த வாலிபர்கள் பாரில் இருந்து சிதறி நாலாபுறமும் ஓடினார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கேலி, கிண்டல்

இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் போலீசாரிடம் இந்த டாஸ்மாக் கடையில் மது குடிக்க வருபவர்கள் காரணைப்புதுச்சேரி சாலை வழியாக செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்வதோடு வரம்பு மீறி நடக்கின்றனர். இதனால் இந்த சாலை வழியாக செல்லும் ராஜீவ் காந்தி நகர், காரணைப்புதுச்சேரி, காட்டூர், அருங்கால் கிராமத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் பொதுமக்கள் தினந்தோறும் பாதிக்கப்படுகிறோம்.

எற்கனவே இந்த அரசு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தும் இதுவரை டாஸ்மாக் கடையை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நாளை முதல் இந்த கடையை திறக்க கூடாது உடனடியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதற்கு போலீசார் உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து டாஸ்மாக் கடை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த டாஸ்மாக் கடை பாரில் ஏற்கனவே ஒரு வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மது வாங்க முடியாமல்

டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் மது வாங்க வந்தவர்கள் வாங்க முடியாமல் அங்கும் இங்கும் நடந்தபடியே தவித்து கொண்டிருந்தனர். ஒரு சிலர் வேறு மதுக்கடைக்கு சென்றனர்.

மேலும் செய்திகள்