கடலூர்
மீன் அங்காடியை இடிக்க பெண் வியாபாரிகள் எதிர்ப்பு
|கடலூர் முதுநகரில் உள்ள மீன் அங்காடியை இடிக்க பெண் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் முதுநகர்,
மீன் அங்காடி
கடலூர் முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட்டில் மாநகராட்சிக்கு சொந்தமாக 170-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகள் மிகவும் சேதமடைந்து உள்ளதால், அதனை இடித்துவிட்டு புதிதாக கடைகள் கட்டும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியது. தொடர்ந்து இந்த கடைகளுக்கு அருகே இருந்த மீன் அங்காடியை பொக்லைன் எந்திரத்தை கொண்டு இடிப்பதற்காக நேற்று மாநகராட்சி அதிகாரிகள் வந்தனர். அப்போது அங்கு மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்த 50-க்கும் மேற்பட்ட பெண் வியாபாரிகள் அங்கு திரண்டு மீன் அங்காடியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநகராட்சி அதிகாரிகளுக்கும், பெண் மீன் வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெண் மீன் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் வழங்காமல், மீன் அங்காடி இடிக்கப்படுகிறது. எங்களுக்கு உரிய மாற்று இடமும் வழங்கப்படவில்லை, எனவே மீன் அங்காடியை இடிக்கக்கூடாது என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மீன் அங்காடியை இடிப்பது குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் மீன் அங்காடியை இடிக்கும் பணியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்த பக்தவச்சலம் மார்க்கெட் உட்பகுதியில் இருந்த கறிக்கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.