பெண்களிடம் நகை பறிப்பு: போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்
|பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி சாய்பாபா காலனியை சேர்ந்த மகேஸ்வரி (வயது 58), கோலார்பட்டி சுங்கத்தை சேர்ந்த அம்சவேணி (32) ஆகியோரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் நகையை பறித்து சென்றார். இந்த 2 சம்பவங்கள் குறித்தும் பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அத்துடன் துணை சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் நகை பறிப்பில் ஈடுபட்டது பொள்ளாச்சியை அடுத்த மாக்கினாம்பட்டியை சேர்ந்த சபரிகிரி (வயது 41) என்பதும், செட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. தற்போது அவர் சி.ஐ.டி. பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து கடந்த 2-ந் தேதி போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு போலீஸ் ஏட்டு சபரிகிரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.