< Back
மாநில செய்திகள்
கலெக்டர் அலுவலகம் முன்பு மண்எண்ணெய் கேனுடன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள்
கடலூர்
மாநில செய்திகள்

கலெக்டர் அலுவலகம் முன்பு மண்எண்ணெய் கேனுடன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள்

தினத்தந்தி
|
4 Sep 2023 7:38 PM GMT

கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மண்எண்ணெய் கேனுடன் பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மதியம் 2 பெண்கள் மனு அளிக்க வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே வந்த போது, திடீரென தாங்கள் ஒரு பாட்டிலில் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் கேனுடன் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உடனே மண்எண்ணெய் கேனை பிடுங்கினர். தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பெண்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மண்எண்ணெய் கொண்டு வந்தது முத்தழகி என்பதும், அவருடன் உறவினர் பெண்ணும் மனு அளிக்க வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், முத்தழகி தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இதற்காக அருகில் உள்ள தனக்கு சொந்தமான மற்றொரு நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து, அங்கிருந்து வாய்க்கால் மூலம் தண்ணீரை கொண்டு வந்து பாசனம் செய்து வருகிறார். தற்போது ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வர குழாய் அமைக்க முயற்சிக்கும்போது, பக்கத்து நிலத்துக்காரர் தடுக்கிறார். இதனால் பயிர் செய்ய முடியாமல் சிரமப்படுகிறேன். எனவே குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளிக்க வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், உங்கள் கோரிக்கை தொடர்பாக கலெக்டரிடம் மனு அளியுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். தொடர்ந்து அவர்கள், கலெக்டரிடம் மனு அளித்துவிட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்