< Back
மாநில செய்திகள்
கும்மிடிப்பூண்டியில் கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய வலியுறுத்தி பெண்கள் போராட்டம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய வலியுறுத்தி பெண்கள் போராட்டம்

தினத்தந்தி
|
12 July 2022 5:11 PM IST

கும்மிடிப்பூண்டியில் கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டியில் உள்ளது மேட்டு காலனி. இங்கு வசிப்பவர் ஆனந்தன் (வயது 36). வெல்டர். இவர், நேற்று காலை தனது பெண் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்றார். பள்ளிக்கு செல்லும் வழியில் அவரை வழிமறித்து கஞ்சா செலவுக்கு பணம் கேட்டு அதே பகுதியை சேர்ந்த 3 கஞ்சா ஆசாமிகள் கத்தி முனையில் அவரையும், குழந்தைகளையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஆனந்தனின் முகம் மற்றும் கண்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் அங்கு உள்ள மாநில நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆனந்தனை தாக்கிய 3 பேரும் கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர்கள். கஞ்சா விற்பனையும் செய்து வருகின்றனர். பணத்திற்காக கத்தி முனையில் வழிபறி செய்வது கஞ்சா போதையில் பொதுமக்களை அடிக்கடி தாக்குவது போன்ற செயல்களில் தினமும் ஈடுபட்டு வருவதாகவும், எத்தனை முறை புகார் அளித்தும் போலீசார் அவர்களை கண்டு கொள்வது இல்லை, என அவர்கள் கோஷமிட்டனர்.

இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ரித்து. புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதற்கு கிராம மக்கள் நாங்கள் புகார் கொடுத்தால் எங்களது உயிருக்கு ஆபத்து தான் வரும். பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நபர்களை நேரில் பார்க்கும் போலீசார், இவர்கள் தான் கஞ்சா வியாபாரிகள் என்று தெரிந்த நிலையிலும், அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையிலும் கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்க கூடாது என வலியுறுத்தி போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

பின்னர், பொதுமக்களின் பிரச்சினையை போலீசாரே புகார் மனுவாக எழுதி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர். இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையாக நடவடிக்கையை உறுதியாக எடுப்போம் என போலீசார் தரப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் உறுதி மொழி தரப்பட்டது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் தங்களது 2 மணி நேர சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்