சென்னை
திருவொற்றியூர்-மணலி சாலையில் மீண்டும் பஸ் போக்குவரத்து கேட்டு பெண்கள் சாலை மறியல்
|திருவொற்றியூர்-மணலி சாலையில் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்க வலியுறுத்தி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை திருவொற்றியூரில் இருந்து மணலி செல்லும் சாலையில் பக்கிங்காம் கால்வாய் மீது மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக மேம்பாலம் கட்டப்படுவதால், பொதுமக்கள் மணலி செல்வதற்கு இணைப்பு சாலையில் பஸ் போக்குவரத்து நடைபெற்றது.
கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் திருவொற்றியூர்-மணலி இணைப்பு சாலை குண்டும் குழியுமாக மாறி விட்டது. இதனால் அந்த சாலையில் அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆட்டோ மற்றும் தனியார் போக்குவரத்து மட்டும் நடைபெற்றது.
இந்தநிலையில் திருவொற்றியூர்-மணலி இணைப்பு சாலையில் மீண்டும் அரசு பஸ் போக்குவரத்து தொடங்க வேண்டும் என்று கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் அதே பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சாத்தாங்காடு போலீசார், இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.