புதுக்கோட்டை
கிராம நிர்வாக அலுவலகத்தை பெண்கள் முற்றுகை-மறியல்
|அன்னவாசல் அருகே மகளிர் உரிமைத்தொகை கேட்டு கிராம நிர்வாக அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மகளிர் உரிமைத்தொகை
அன்னவாசல் அருகே குடுமியான்மலை பகுதிகளில் தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கடந்த ஒரு மாத காலமாக கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்களுக்கு பலமுறை சென்று மனு அளித்தும் உரிமைத் தொகை கிடைக்கவில்லை.
மேலும் இ-சேவை மையங்களில் தங்களின் தரவுகள் கிடைக்கப் பெறவில்லை என்றும், பரிசீலனையில் உள்ளது என்றும், மேல் முறையீடு செய்யவும் என்றும் சொல்கிறார்கள். மேல் முறையீடு செய்தும் இந்த மாதமும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை.
சாலை மறியல்
எனவே தகுதியான பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி காட்டுப்பட்டி, உருவம்பட்டி, சேரானூர், மரிங்கிப்பட்டி, பின்னங்குடி, ஆணைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் குடுமியான்மலை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதையறிந்தும் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு வராததால் ஆத்திரமடைந்த பெண்கள் குடுமியான்மலை கடைவீதியில் புதுக்கோட்டை-பரம்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த குடுமியான்மலை வருவாய் ஆய்வாளர் சரோஜா, பரம்பூர் கிராம நிர்வாக அலுவலர் ரவி, கிளிக்குடி கிராம நிர்வாக அலுவலர் ராமர், அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிமைத்தொகை கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதையடுத்து பெண்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் புதுக்கோட்டை-பரம்பூர் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.